தபால் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் தபால் நிலைய பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறையில் தபால் நிலைய பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சுற்றுலா தலம்
கோவை மாவட்டம் வால்பாறையானது, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக வால்பாறை நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் வரத்து அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கடும் அவதி
இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோடு வாழைத்தோட்டம் பகுதியில் பள்ளிகள் உள்ளன. இதன் காரணமாக அந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தபால் நிலையம் முன்புறம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் அந்த பகுதி சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
போலீசார் பணியில் இல்லை
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, தபால் நிலையம் முன்புறம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும்போது, கடும் நெரிசல் ஏற்படுகிறது.
இதை கட்டுப்படுத்த போலீசாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை நியமித்து சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.