இயற்கை புகையிலை விற்பனைக்கு தடையில்லை


இயற்கை புகையிலை விற்பனைக்கு தடையில்லை
x

இயற்கையான புகையிலை விற்பனைக்கு தடையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

இயற்கையான புகையிலை விற்பனைக்கு தடையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டில் மனு

பல்வேறு இயற்கை புகையிலை விற்பனையாளர்கள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது போல், இயற்கை புகையிலை விற்பனைக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த தடையை நீக்க வேண்டும் என கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

ஆய்வில் உறுதி

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, புகையிலையை உரிய தயாரிப்பு முறைகளை மேற்கொண்டு தனித்துவமான முறையில் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற தயாரிப்பு முறை அல்லாத புகையிலையையே கையாள்கின்றனர். புகையிலையில் தூசி மற்றும் மணலை துடைத்துவிட்டு, இனிப்பு கலந்த தண்ணீரை தெளித்து சிறு துண்டுகளாக்கப்பட்டு விற்கின்றனர். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி புகையிலையில் நிக்கோடின் கலந்திருக்கக்கூடாது. ஆனால் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட புகையிலைகளை ஆய்வு செய்ததில், நிக்கோடின் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன, என்றார்.

புகையிலையில் நிக்கோடின்

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இனிப்பு தண்ணீர் நிக்கோடினாக மாற வாய்ப்பில்லை. அதே நேரம் புகையிலையில் நிக்கோடின் இயற்கையாகவே குறிப்பிட்ட அளவு சேர்ந்துள்ளது. அதை மனுதாரர்கள் சேர்த்தார்கள் என்று கூறமுடியாது. கஞ்சாவைப் போல இல்லாமல், புகையிலை சாகுபடி இன்னும் தடை செய்யப்படவில்லை. புகையிலை ஆராய்ச்சி மையம் கூட திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ளது. மனுதாரர்கள் புகையிலையில் எந்தவித உணவுப் பொருளையும் சேர்க்கவில்லை. சட்டப்படி புகையிலை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கானது.

டாஸ்மாக் வருவாய்

மருத்துவ காரணங்களைத்தவிர மதுபான நுகர்வை தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அரசே மதுபானங்களை விற்கிறது. அரசுக்கு அதிகப்படியான வருவாயும் மதுவிற்பனை மூலமே கிடைக்கிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனம் ஆயிரக்கணக்கான கடைகளை நடத்துகிறது. அப்படி இருக்கும்போது இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதம் சாத்தான் வேதத்தை மேற்கோள் காட்டுவது போல உள்ளது.

எனவே உற்பத்தி செய்யாத பொருட்களை கையாண்டதன் மூலம் மனுதாரர்கள் எந்த விதியையும் மீறவில்லை. புகையிலையை மனுதாரர்கள் விற்பனை செய்யக்கூடாது. இருப்பு வைக்கக் கூடாது என்ற உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story