பொது பாடத்திட்டத்தால் பல்கலைக்கழக அதிகாரங்களில் எந்த பாதிப்பும் இல்லை -அமைச்சர் பொன்முடி தகவல்
பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதால் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை,
மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த கூட்டத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உள்பட துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில பல்கலைக்கழகங்களில் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட விவகாரம், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நிகழ்வுகள், காலிப்பணியிடங்கள் குறித்த விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடந்தது. ஆலோசனை முடிவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொது பாடத்திட்டங்கள்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பேச்சு, கட்டுரை, வினாடி-வினா, கவிதை உள்பட போட்டிகளை கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவில் நடத்தி பரிசுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு 100 சதவீதம் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், மற்ற பாடங்களுக்கு 75 சதவீத பாடத்திட்டங்களும் உருவாக்கப்படும், மற்ற பாடங்களுக்கான மீதமுள்ள 25 சதவீதம் அந்தந்த பல்கலைக்கழகங்களின் பாடவாரியங்கள் (போர்டு ஆப் ஸ்டடிஸ்) முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பொது பாடத்திட்டங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு அனைத்து துணைவேந்தர்களின் ஒத்துழைப்போடு முடிவு செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டது. சில இடங்களில் புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த படிப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.
பாதிப்பு இல்லை
கிட்டதட்ட 90 சதவீதம் புதிய பாடத்திட்டங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, இந்த ஆண்டு முதல் பொது பாடத்திட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பொது பாடத்திட்டத்தால் பல்கலைக்கழகங்கள், பாடவாரியங்களின் அதிகாரங்களில் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களோடு ஆலோசித்துதான் இந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கும், ஒரு கல்லூரியில் பணிபுரிந்து மற்றொரு கல்லூரிக்கு இடமாறுதல் செல்லும் பேராசிரியர்களுக்கும் பாடத்திட்டங்கள் எளிதாக இருக்கும்.
பொது பாடத்திட்டம் 2023-24-ம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் அமல்படுத்தப்பட்டுவிடும். கூடுதலாக கொண்டுவரப்படும் புதிய படிப்புகள் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அவர்களுக்கு 2024-25-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம்
பொது பாடத்திட்டங்களை சிலர் எதிர்க்கிறார்கள். பலர் ஆதரிக்கிறார்கள். பல்கலைக்கழக தலைவர்கள், திறமை வாய்ந்த துறை நிபுணர்களை அழைத்துதான் பொது பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. காலத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பொதுப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் தன்னாட்சி கல்லூரிகளையும் அழைத்து பிரச்சினைகள் குறித்து பேசுவோம்.
பேராசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மேலும் கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கும் குழு அமைக்கப்பட உள்ளன. கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவர்களின் ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த முதல்-அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். மாநில கல்விக் கொள்கைக்குழு தயாராகி வருகிறது. அதுவும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக சந்திப்போம்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள், 'அமலாக்கத்துறை சோதனையில் உங்களிடம் இருந்து பணத்தை அதிகாரிகள் முடக்கம் செய்தது உண்மையா?, உயர்கல்வித் துறையில் உங்கள் செயல்பாட்டை முடக்க அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறதா?' என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'இது நாங்கள் பார்க்காதது இல்லை. முதல்-அமைச்சரே சொல்லியிருக்கிறார். எதுவாக இருந்தாலும் சட்டரீதியாக சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம்' என்றார்.