"தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரிப்பதில் நியாயம் இல்லை" மதுரை ஐகோர்ட்டு கருத்து


தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரிப்பதில் நியாயம் இல்லை மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

குழந்தை மீது அதிக அக்கறை கொண்டிருப்பதால், தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரிப்பது நியாயமானதாக இருக்காது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.

மதுரை,

நானும், என் மனைவியும் கடந்த 2020-ம் ஆண்டில் 10 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தோம். அந்த குழந்தையை சட்டவிரோதமாக நாங்கள் வைத்திருப்பதாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தையை கைப்பற்றி காப்பகத்தில் வைத்தனர். இதுகுறித்து போலீசில் என் மீதும், என் மனைவி மீதும் வழக்குபதிவு செய்தனர். குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி நாங்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எங்களின் கோரிக்கையை முறையாக விசாரித்து குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவர் நீதிக்குழுமத்திற்கு 28.9.2020 அன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பிறப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குழந்தையை ஒப்படைப்பது பற்றி விசாரிக்கவே இல்லை. எனவே ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தத்தெடுத்த தம்பதி

இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரரின் உறவினர் தத்தெடுத்த குழந்தையை அவர்களிடமே ஒப்படைக்க இந்த கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட குழந்தை கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இது குழந்தையின் தவறில்லை.

இந்த குழந்தையை தத்தெடுத்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை காப்பகத்திற்கு வந்து குழந்தையை பார்த்து செல்கின்றனர். ஆனால் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் இதுவரை வரவில்லை. தத்தெடுத்த தம்பதி, குழந்தையின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. எனவே இந்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரித்து வைப்பது நியாயமானதாக இருக்காது. இது குழந்தையின் நலனுக்கும் நல்லதல்ல.

இதனால் மனுதாரர், அவரது மனைவி மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்கிறோம். அவர்கள், காப்பகத்திற்கு சென்று குழந்தையை தங்கள் வசப்படுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story