தமிழகத்தில் குரங்கு அம்மை இல்லை என்றாலும் எச்சரிக்கை அவசியம் - ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திருச்சி அரசு மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவை பார்வையிட்டு, அந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்து அலுவலர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி அதிகம் செலுத்திக் கொண்டதால் நோய்எதிர்ப்பு அதிகரித்து உள்ளது, இருந்தாலும் கவனக் குறைவாக இருக்க கூடாது. வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும். ஏதேனும் உடலில் நோய் தொற்று அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்நோய் பதிவாகவில்லை என்றாலும், இந்நோய் குறித்த கண்காணிப்பு தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.