`இடைத்தேர்தலில் பா.ஜனதா பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' - அண்ணாமலை


`இடைத்தேர்தலில் பா.ஜனதா பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை - அண்ணாமலை
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நெல்லையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருநெல்வேலி

நெல்லையில், பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் மூத்த அமைச்சர்கள் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அந்த கட்சியின் மாவட்ட தலைவரே அதிருப்தியை தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தலை ஒரு பயத்தோடு அணுகுகிறது. தி.மு.க.வின் 20 மாத ஆட்சி சரியில்லை என்பதை மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. தலைவர்கள் எடுத்துக் கூறி வருகின்றனர்.

தேர்தல் போட்டி களத்தில் இருக்கும் முதல் ஆள் தான் வெற்றி பெறுவார் என்பது கிடையாது. தி.மு.க.வை பொறுத்தவரை அவர்களது நிலைமை மோசமாக இருக்கிறது. அதனால் தான் கே.என்.நேரு போன்ற மூத்த தலைவர்களை பிரசாரத்திற்கு அனுப்பி உள்ளனர். இடைத்தேர்தலை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிறகு 80 சதவீதத்திற்கு மேல் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் அடுத்து வரக்கூடிய பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவுகிறார்.

பா.ஜனதா கூட்டணி சார்பில் நியாயமான வேட்பாளர், மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர் நிறுத்தப்படுவார். இந்த இடைத்தேர்தல் முடிவால் ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. வருகிற 13 மாதங்கள் கழித்து நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் தான் பிரதமர் மோடியின் ஆட்சி தொடர்வதற்கான தேர்தல் ஆகும். இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேருவது குறித்து நான் கருத்து கூற முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருமித்த கருத்து நிலவ வேண்டும். இதற்காக ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். வேட்பாளர் தேர்வு, கட்சி சின்னம் ஆகியன குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பதே இந்த தேர்தலில் நிலைப்பாடு ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளது. தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வருகிற 2026-ம் ஆண்டு செயல்பட தொடங்கும்.

பால்வளத்துறை அமைச்சர் நாசர் பட்டப்பகலில் அதிகாரிகள் முன்னிலையில் கல் எடுத்து அடிக்கிறார். இது தி.மு.க. அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. குடியரசு தினத்தையொட்டி கவர்னர் அளிக்கும் விருந்துக்கு தொல். திருமாவளவன் கட்சியினர் வரமாட்டேன் என்று கூறியிருப்பது டீ செலவை மிச்சப்படுத்தும். எங்களுக்கு அழைப்பு உள்ளது, நாங்கள் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story