பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருவ நிலை மாற்றத்தினால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.
வைரஸ் காய்ச்சல்
தமிழக முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக அளவில் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சலுக்கு என தனிப்பிரிவு தொடங்கப்பட்டு டாக்டர்கள் மூலமாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பேட்டி
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெறுபவர்களை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வார காலமாக அதிக அளவில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பெரியவர்களுக்கு தனியாகவும், குழந்தைகளுக்கு தனியாகவும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அச்சப்பட தேவையில்லை
இதுபோன்ற காய்ச்சல் வரும்போது பெற்றோர்கள் குழந்தைகளை உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.மாறாக மருந்தகங்களில் காண்பித்து மாத்திரை வாங்கி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது குழந்தைகள் அபாயகரமான கட்டத்தை எட்ட கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. எவ்வளவு கடுமையான காய்ச்சலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.