பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2022 6:45 PM GMT (Updated: 21 Sep 2022 6:55 PM GMT)

காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பேட்டி

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவர் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார். சுவாமி-அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். கோவில் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அமைச்சர், பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார். மாணவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுத்து, நகரசபை தலைவர் நாசர்கான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விடுமுறை தேவை இல்லை

ஆய்வுக்குப் பின்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் குழந்தைகளின் கல்வித்திறன் அதிகரித்துள்ளது. டியூசனுக்கு கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். தற்போது பரவி வரும் காய்ச்சல் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட தேவை இல்லை. காய்ச்சல் பரவுவதை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். மாணவர்களின் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story