"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

“பெண் போலீசிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

திருநெல்வேலி

"பெண் போலீசிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.

51 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிப்ரவரி 23-ந்தேதி 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். ஆனால் 1 ஆண்டுக்கு முன்பே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கேள்வி கேட்க தயக்கம்

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களுக்காக இடதுசாரி அமைப்புகள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. மவுனம் சாதித்து வருகிறார்கள். தி.மு.க.வை எதிர்த்து கேள்வி கேட்க அனைத்து கட்சிகளும் தயங்கி வருகிறது. அ.தி.மு.க. மட்டுமே தி.மு.க.வை எதிர்த்து கேள்விகளை எழுப்பி போராட்டங்கள் நடத்தி வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சி முடியும் நேரத்தில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பல தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் தி.மு.க. ஆட்சியில் தற்போது ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் வகையில் கடன் தொகை உயர்ந்துள்ளது.

நிதி அமைச்சர்

தமிழக நிதி அமைச்சர் அவருக்கு என்று தனியாக ஒரு பாதையில் செல்கிறார். அவர் யார் சொல்வதையும் கேட்பதில்லை. அவரிடம் முதல்-அமைச்சர் எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலை உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க இரும்பு மனம் படைத்த இந்த ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. நாங்கள் போராட்டம் அறிவித்தவுடன் கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

போதைப்பொருட்கள்

தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும் 120 விருதுகள் பெறப்பட்டன.

சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவம், ஏ.கே.சீனிவாசன், பொருளாளர் சவுந்தர்ராஜன், மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், முன்னாள் அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, இளைஞரணி செயலாளர் பால்துரை, திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், அந்தோணி அமல்ராஜா, கே.பி.கே.செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், வண்ணார்பேட்டையில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு இடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட உயர்வுகளை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இந்த பஸ்நிலையத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story