"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை"-நடிகை குஷ்பு பேட்டி


தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை-நடிகை குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறினார்.

தூத்துக்குடி

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறினார்.

சட்டம் ஒழுங்கு மோசம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பத்திரிகைகளில் தினமும் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது செயலும் அப்படித்தான் இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தாலும் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

இழிவாக பேசுவதா?

நாங்கள் எழுதி கொடுத்ததைத்தான் கவர்னர் படிக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. இதற்கு முன்பு இதே பொன்முடி அரசு பஸ்சில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்தும் இழிவாக பேசி உள்ளார்.

அப்போதும் அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது தான் திராவிட மாடலா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story