'தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

‘தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை’ என்று சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், மருத்துவத்தில் 'ரோபோட்டிக்ஸ்' மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை டாக்டர்.ஏ.சண்முகசுந்தரம் பெயரில் கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ரூ.34.60 கோடி செலவில் அதிநவீன எந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இம்மையத்தின் மூலம் 69 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கிறது. 27 புற்று நோய் அறுவை சிகிச்சைகள், 8 இதய அறுவை சிகிச்சைகள், 15 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 7 குடல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 12 நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சைகள் இம்மையத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 'ரோபோடிக்ஸ்' மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை பல்வேறு தொழில்நுட்பங்களையும், முன்னேற்றங்களையும் அடைந்து தமிழக மக்களுக்கு சிறப்பான வகையில் சேவை புரிய உள்ளது.

மருந்து தட்டுப்பாடு இல்லை

தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 மருந்து கிடங்குகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அதில் 2 வகையான மருந்துகள் அவசியமானதாகும். அவை அவசர மருந்துகள் (300-க்கும் மேல்) மற்றும் சிறப்பு மருந்துகள் (300-க்கும் மேல்) ஆகும். இவற்றின் இருப்புகள் குறித்து இணையதளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 32 மருந்து கிடங்குகளிலும் இதுகுறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் தலைமையிலான இந்த அரசு மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் அனைத்து மருந்து இருப்புகள் குறித்த தகவல்கள் வெளிப்படையாகவே வைக்கப்பட்டு உள்ளது. மருந்து தொடர்பான பிரச்சினைகள், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் நோய் குறித்தும், மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து விவாதிக்க, தமிழகம் முழுவதும் இருக்கின்ற துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பல்கலைக்கழக செனட் உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ, பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ம.பா.அஸ்வத் நாராயணன், விநாயகா மிஷன் நிறுவனத்தின் வேந்தர் டாக்டர்.ஏ.எஸ்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story