இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை -டி.டி.வி.தினகரன் பேட்டி


இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை -டி.டி.வி.தினகரன் பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை என்று நேற்று முன்தினம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டோம். குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில் தேவையற்ற குழப்பம் வேண்டாம் என்று நிர்வாகிகள் சொன்னதாலேயே தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு எடுத்து அறிக்கை வெளியிட்டேன். யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் நாங்கள் வாபஸ் பெறவில்லை. இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை.

பன்னீர்செல்வமும், நானும்...

அ.ம.மு.க. இதுவரை எந்த அணியிலும் இருந்ததில்லை. புதிய அணியில் இணைவது பற்றி நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பார்க்கலாம். பன்னீர்செல்வமும், நானும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கிறது.

இரட்டை இலையை பெற்றுவிட்டதால் மட்டும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட முடியாது. இரட்டை இலை சின்னம் தவறானவர்களின் கையில் இருக்கிறது. நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுத்திருந்தாலும் அந்த சின்னத்திற்கான சக்தி இனிமேல் இருக்காது.

யாருக்கும் ஆதரவு இல்லை

ஈரோடு இடைத்தேர்தலில் அ.ம.மு.க. யாருக்கும் ஆதரவு இல்லை.

2026 சட்டமன்றத்தேர்தலில் பெரும்பாலான தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். மேலும், அரசியலில் எது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களுக்கு பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story