ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக பொதுமக்களிடையே பீதி
ராமநத்தம் அருகே ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக பொதுமக்களிடையே பீதி
ராமநத்தம்
ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த அரிசி வெள்ளை நிறத்தில் நீளமாக, அளவில் பெரியதாக காணப்படுவதாகவும், இதை சமைப்பதற்காக தண்ணீரில் ஊற வைத்தால் மிதப்பாதகவும், எனவே ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக தகவல் பரவியதால் பொது மக்களிடையே அச்சம் நிலவியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தாங்கள் வாங்கிய ரேஷன் அரிசியை எடுத்து வந்து ஒருவர் மற்றொருவரிடம் காண்பித்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் கூறும்போது, ரேஷன் கடையில் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படும் அரிசியில் வெள்ளை நிற நீளமான அரிசி கலக்கப்படுவதாவும், இந்த அரிசியை சமைக்காமலேயே சாதம் போன்று காணப்படுவதால் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்து இருக்குமோ என்ற அச்சம் உள்ளது என்றனர். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரவியதை அடுத்து சமூக வலைதளங்களிலும் வீடியோ வைரலானது.
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராணியிடம் கேட்டபோது வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசியும் கலந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதாவும், இந்த அரிசியைத்தான் பிளாஸ்டிக் அரிசியாக பொதுமக்கள் தவறாக கருதுவதாகவும் கூறினார். பின்னர் ஆலம்பாடி கிராமத்துக்கு வந்த அதிகாரிகள் ரேஷன் அாிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டதையும், அது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பதையும், செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிட்டால் இரும்பு சத்து அதிகம் கிடைக்கும் என்று கூறி பொதுமக்களிடையே உள்ள அச்சத்தை போக்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.