ஊராட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்க கூடாது


ஊராட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்க கூடாது
x

ஊராட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்க கூடாது என்று ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.

சேலம்

ஊராட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்க கூடாது என்று ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டம்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளில் 222 ஊராட்சிமன்ற பெண் தலைவர்கள் உள்ளனர். ஊராட்சிமன்ற பெண் தலைவர்கள், தங்கள் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள், கடமைகள், நடைமுறையில் உள்ள அரசு திட்டங்கள் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அரசு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிராம ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

தலையீடு இருக்க கூடாது

ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் வரவு, செலவு, வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு தொகை போன்ற விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஊராட்சியில் முக்கியமாக நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் மழை, கோடைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஊராட்சி நிர்வாகத்தில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்க கூடாது. உதவிக்காக சிலரது ஆலோசனை மற்றும் அறிவுரைகளை கேட்டு கொள்ளலாம். மற்றப்படி சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போது தான் பொதுமக்களின் பிரச்சினைகளை ஊராட்சிமன்ற பெண் தலைவர்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தினமும் மக்களை சந்தித்து அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

சிறந்த ஊராட்சியாக..

மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக தங்களது ஊராட்சிகள் அமைவதற்கு ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) தமிழரசி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மயில், துணை இயக்குனர்கள் (சுகாதார பணிகள்) சவுண்டம்மாள், ஜெமினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊராட்சிமன்ற பெண் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story