குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியில் இருந்து குறிச்சி, குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி
இதனை கண்ட பொதுமக்கள், கிணத்துக்கடவு பேரூராட்சி குடிநீர் பணியாளர் உடனடியாக குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பணியை விரைவுப்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் அவதி
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கவலை அளிக்கிறது
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இவ்வளவு தண்ணீர் சாலையில் வீணாக சென்றது கவலை அளிக்கிறது.
குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி இதுபோன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
குடிநீர் வினியோகம் தடை
குடிநீர் குழாய் உடைப்பு குறித்து குடிநீர் அதிகாரிகள் கூறியதாவது:-
நேற்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் குழாயை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது குறிச்சி-குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது. குடிநீர் குழாயை சரிசெய்த உடன் குடிநீர் விநியோகம் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.