கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2023 6:41 PM IST (Updated: 9 Oct 2023 6:42 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி கூலி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, கால்வாய் வசதி, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெற்றப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மாதப்பூண்டி கிராமத்தை சேர்ந்த புவனேசன் (வயது 40) என்பவர் அவரது தாய், தந்தை, மனைவி மற்றும் 2 மகன்களுடன் வந்தார்.

திடீரென அவர் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அவர் மீது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

தொடர்ந்து புவனேசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், புவனேசன் பெங்களூருவில் காய்கறி கடையில் கூலி தொழில் செய்து வருகிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்அணைக்கரை கிராமத்தில் 765 சதுர அடி காலிமனை வாங்கி உள்ளார். இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அவரது நிலத்தை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் தற்கொலை முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் மேல்விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தரையில் அமர்ந்து போராட்டம்

திருவண்ணாமலை அருகில் சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரின் மனைவி மெட்டில்டா என்பவர் அவரது 2 மகள்களுக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் அவர்கள் போர்டிகோவில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், எங்கள் நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர். நிலத்தை முறையாக அளந்து அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றனர்.

பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.

இந்த சம்பவங்களினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story