பழுதான கார்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
வேலூர் அருகே பழுதான கார்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரை அடுத்த பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் அருகே கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. இங்கு பழுதான ஏராளமான கார்கள் சரி செய்வதற்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மாலை 3 மணியளவில் பழுதான கார் ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் அந்த கார் தீப்பற்றி மள மளவென்று எரிய தொடங்கியது.
தொடர்ந்து வேகமாக எரிந்த தீ அருகே உள்ள கார்களுக்கும் பரவியது. அதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.