சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி மண் எடுக்கும் பணியை பாமகவினர் தடுத்ததால் பரபரப்பு
சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. நிர்வாகம் மண் எடுக்கும் பணியை பா.ம.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாதோப்பு,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்கப்பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கரிவெட்டி, அம்மன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டிருந்தபோது தகவல் அறிந்து வந்த கிராமம மக்கள் மற்றும் பா.ம.க. வினர் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோாிக்கைகளை வலியுறுத்தி நிலம் கையகப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தினர்.
பா.ம.க.வினர் தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பாதை அமைக்கும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாதையில் மண் கொட்டி கனரக வாகனங்கள் மூலம் சரி செய்து வருகிறது.
நேற்ற இந்த பணிகள் நடைபெறுவதை அறிந்து பா.ம.க.தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் வத்தராயன் தெத்து செல்வராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து பாதைஅமைப்பதற்காக மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள் பணியை நிறுத்திவிட்டு வாகனங்களுடன் அங்கிருந்து திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.