சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொசுவலையுடன் வந்தவர்களால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொசுவலையுடன் வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sept 2022 1:45 AM IST (Updated: 6 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொசுவலையுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொசுவலையுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்பட கோரிக்கைகள் தொடர்பாக 352 பேர் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

பின்னர் தரைத்தளத்துக்கு வந்த கலெக்டர் அங்கு மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

கொசுவலையுடன் வந்தவர்கள்...

நேற்று நடைபெற்ற முகாமில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் உடலில் கொசுவலை சுற்றியபடி வந்து மனு கொடுக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கொசுவலைகளை நீக்கிவிட்டு மனு கொடுக்க செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து கொசுவலைகளை நீக்கிவிட்டு கலெக்டர் கார்மேகத்திடம் அவர்கள் மனு கொடுத்தனர்.

கொசுக்கள் தொல்லை

இது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது:- சேலம் மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சாக்கடை கால்வாயில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது. கொசுத்தொல்லைகளால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க கோரி கொசுவலைகளை சுற்றியபடி மனு கொடுக்க வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மதி மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story