விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தீக்குளிக்க முயற்சி
கலசபாக்கம் தாலுகா பாடகம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 35) விவசாயி. இவர், தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்த அவர் தனது குடும்பத்தினருடன் திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், 'எனக்கு காம்பட்டு கிராமத்தின் எல்லையில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்து எங்களை அடித்து, கொலை மிரட்டல் விடுகின்றனர்.
மேலும் எனது கையையும் உடைத்து விட்டனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்களை தாக்கி நிலத்தை அபகரிக்க முயற்சி செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
பின்னர் அவர்களை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு மேல் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
கந்து வட்டி
ஆரணி தாலுகா கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி வசந்தி மற்றும் போளூர் தாலுகா அர்ச்சுனாபுரம் பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி ஆகியோர் கந்துவட்டி தொடர்பாக குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கண்ணமங்கலத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கினோம். அப்போது அவர் எங்களிடம் இருந்து ரூ.50 மற்றும் ரூ.100 வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கி கொண்டார்.
மேலும் நிலப்பட்டாக்கள் இரண்டை பெற்றுக்கொண்டார். நாங்கள் அவரிடம் இருந்து பெற்ற ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டோம். இதற்கு ரூ.2 லட்சம் வரை வட்டி பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் மீட்டர் வட்டி, கந்து வட்டி என கணக்கு போட்டு ரூ.14 லட்சம் தர வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கின்றார்.
மேலும் அவர் எங்களை அடித்து ஆடைகளை களைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து உள்ளார்கள். அவர்கள் கேட்ட பணத்தை தரவில்லை என்றால் எங்களை நிர்வாணமாக எடுத்த புகைப்படத்தை இணையதளம் மூலம் வெளியிடுவோம் என மிரட்டுகிறார்கள். இதுகுறித்து பலமுறை போலீசில் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மூதாட்டி போராட்டம்
தண்டராம்பட்டு தாலுகா மலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீதா (வயது 80). இவர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில், தனக்கு 1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பட்டாவை பெயர் மாற்றம் செய்து உள்ளனர். அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி கடந்த 2017-ம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை அந்த பட்டா ரத்து செய்யப்பட வில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் மூதாட்டியை போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.