ஓடும் சரக்கு ரெயிலில் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு
நெல்லிக்குப்பம் அருகே ஓடும் சரக்கு ரெயிலில் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
சக்கரத்தில் தீப்பொறி
மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் நோக்கி சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே சென்றபோது, ரெயில் சக்கரத்தில் இருந்து திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக ரெயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரெயில் ஊழியர்கள் விரைந்து சென்று தீப்பொறி ஏற்பட்ட சக்கரம் உள்ள இடத்தை பார்வையிட்டனர். அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பொறி கிளம்பியது தெரியவந்தது.
ஊழியர்கள் சரி செய்தனர்
அதைத்தொடர்ந்து ரெயில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுதை ஊழியர்கள் சரி செய்தனர். அதன்பிறகு சுமார் 1½ மணி நேரம் தாமதாமாக காலை 7 மணிக்கு அந்த ரெயில் அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கத்திற்கு புறப்பட்டு சென்றடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.