நாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த வியாபாரியால் பரபரப்பு


நாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த வியாபாரியால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 July 2023 8:03 PM (Updated: 23 July 2023 10:27 AM)
t-max-icont-min-icon

முருகன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாயை தூக்கிக்கொண்டு மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.

சேலம்

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர், பழைய மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை வாங்கி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்க்கும் பொமேரியன் வகை நாய்க்கு வெறிநாய் தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்தார். அங்கு தடுப்பூசி இல்லை என்று டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கூறியதால் அதிருப்தி அடைந்தார். அப்போது அவர் ஏற்கனவே 3 மாதங்கள் முன்பு வந்தபோதும், இதே பதிலை தான் கூறினீர்கள்? தற்போதும் மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி இல்லை என கூறுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்விக்கேட்டு அங்கிருந்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை. நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்? என கால்நடை மருத்துவ ஊழியர்கள் முருகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகன் அங்கிருந்து வெளியேறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாயை தூக்கிக்கொண்டு மனு கொடுக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.இது குறித்து சேலம் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது,'மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி மருந்து தற்போது இருப்பு இல்லை. விரைவில் வந்துவிடும். அதன்பிறகு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்' என்றனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story