தொழில் முனைவோர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழில்முனைவோர்கள் தர்ணா
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்ட அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட தொழிற் மைய மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்முனைவோர்கள் கலெக்டர் இங்கு வரவேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வங்கிகளில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்களுக்கான மானிய கடனுதவி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் வங்கிகளுக்குச் சென்றால் உரிய முறையில் பதில் அளிக்கப்படுவதில்லை. மேலும் பல்வேறு ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்கின்றனர். ரூ.10 லட்சம் வரை கடன் பெற உத்திரவாதம் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆனால் வங்கிகளுக்கு சென்றால் உத்திரவாதம் கேட்கின்றனர். இதனால் உரிய காலத்தில் கடன் உதவி பெற இயலாமல் பல இளைஞர்கள் வேலைப்வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்.
கடனுதவி வழங்க வேண்டும்
கடனுதவி வழங்குவதாக நடத்தப்படும் இதுபோன்ற கூட்டங்களால் எங்களுக்கு பயன் ஏதும் ஏற்படவில்லை. கண்துடைப்புக்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே கடனுதவி பெற விண்ணப்பிப்பவர்களுக்கு உரிய நேரத்தில் கடன் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், 'உங்களது கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் தனிப்பட்ட கோரிக்கைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். மேலும் வங்கிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வங்கி அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்' என்றார்.