குள்ளஞ்சாவடி அருகே சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
குள்ளஞ்சாவடி அருகே சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குள்ளஞ்சாவடி,
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கோரணப்பட்டு ஊராட்சியில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கு அப்பகுதி மக்கள் நேற்று ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 குடு்ம்பத்தினர், எங்கள் வீட்டின் முன்பு சிலை வைக்கக்கூடாது என்றும், சிலை வைத்தால் வீட்டிற்கு செல்லும் பாதை மறைக்கப்படும் என்று கூறி தடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், அந்த குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் துறையினர், குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், 4 அடி உயரத்திற்கு மேல் சிலை வைக்கக்கூடாது, ஒலிப்பெருக்கி, பந்தல் அமைத்தல் கூடாது, வீட்டின் பாதையை மறைக்காமலும், பொது போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து சிலை வைக்க அனுமதி வழங்கினர்.
இதனை ஏற்றுக்கொண்ட அந்த குடும்பத்தினர், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.