அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களால் பரபரப்பு


அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களால் பரபரப்பு
x

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்


பெரம்பலூரில் இருந்து வேப்பந்தட்டை வழியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திற்கு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு சென்றது. பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த முருகேசன் (வயது52) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக நூத்தப்பூரை சேர்ந்த முருகேசன்(48) பணியில் இருந்தார். அப்போது பஸ் வெண்பாவூர் அருகே சென்றபோது இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கல் வீசி பஸ் கண்ணாடியை உடைத்தனர். உடனடியாக டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் மர்ம நபர்களை பிடிக்க துரத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்த கல் வீச்சு தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் முருகேசன் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தால் பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு பின்னால் வந்த தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story