அன்னூரில் நடுரோட்டில் படுத்து உருண்ட போதை ஆசாமியால் பரபரப்பு
அன்னூரில் நடுரோட்டில் படுத்து உருண்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூர்
கோவை மாவட்டம் அன்னூர் பஸ் நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு, எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வருபவர்கள் மது வாங்கி குடித்து விட்டு, சாலைகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் மது வாங்கி குடித்தார். பின்னர் அவர் போதை தலைக்கேறிய நிலையில், தள்ளாடியபடியே மன்னீஸ்வரர் கோவில் அருகே கீழே விழுந்து சாலையில் அங்குமிங்குமாக உருண்டார். இதை பார்த்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சிலர் அந்த நபரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்காமல் தொடர்ந்து சாலையில் உருண்டபடியே இருந்தார். இதனால் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அப்போதும் அவர் எழுந்திருக்க வில்லை. நீண்ட நேரத்துக்கு பின்னர் அவர் அப்புறப்படுத்தப்பட்டார். மதுபோதையில் ஒருவர் சாலையில் படுத்து உருண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.