குறைதீர் கூட்டத்திற்கு வந்த பணியாளர்களை கலெக்டர் வெளியேற்றியதால் பரபரப்பு


குறைதீர் கூட்டத்திற்கு வந்த பணியாளர்களை கலெக்டர் வெளியேற்றியதால் பரபரப்பு
x

பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பணியாளர்களை வெளியேற்றிய கலெக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

காலதாமதம்

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ய அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து கலெக்டர் விளக்கம் கேட்பது வழக்கம்.

இந்நிலையில் 2-ம் நிலை அதிகாரிகள் ஒருவரே தொடர்ந்து வராமல் மாறி மாறி வருவதால் ஏற்கனவே வாங்கிய மனுக்களை பற்றி தங்களுக்கு தெரியாது என தொடர்ந்து கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் சிரமமும், காலதாமதமும் ஏற்படுகிறது.

வெளியேற உத்தரவு

இந்த நிலையில் நேற்று அரியலூர் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2-ம் நிலை அதிகாரிகள் வராமல் அலுவலக பணியாளர்களை அனுப்பி வைத்திருந்தனர். இதனால் உரிய அதிகாரிகள் இருந்தால் மட்டுமே மனுக்கள் மீது சரியான பதில் அளிக்க முடியும். மனுவிற்கும் தீர்வு காணமுடியும் என்பதால் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கூறினார். மேலும் அலுவலக பணியாளர்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். அதையடுத்து பணியாளர்கள் அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. வெளியே வந்த பணியாளர்கள் தங்களது உயர் அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story