நீதிமன்றத்தில் திரண்ட கிராம மக்களால் பரபரப்பு


நீதிமன்றத்தில் திரண்ட கிராம மக்களால் பரபரப்பு
x

அய்யனார் கோவிலை பொதுக்கோவிலாக அறிவிக்க வேண்டி நீதிமன்றத்தில் திரண்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

கோவில்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் காவல் தெய்வங்களாக வீரனார், அய்யனார் கோவில் உள்ளது. ஊரின் நடுவே திரவுபதி அம்மன் மாரியம்மன் கோவில் உள்ளது. இவைகள் அனைத்தும் அரசு பொது இடத்தில் ஊர் மக்களின் வரி பணத்தில் கடந்த 1993-ல் கட்டப்பட்டு பொதுகோவிலாக அனைத்து வகையறா மக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவில்களை கிராமத்தைச் சேர்ந்த 6 நாட்டார்கள் இணைந்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கடந்தையார் வகையறாவை சேர்ந்த ஒரு நாட்டார் மற்றும் சிலர் இணைந்து அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இந்த கோவில் தங்கள் வகையராவுக்கு மட்டுமே சொந்தமானது என்று தெரிவித்தனர். இதனை கண்ட மற்ற 5 நாட்டவர்கள் மற்றும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரபரப்பு

இதுதொடர்பான புகாரின் பேரில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதற்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் எழிலரசன் என்பவர் வீரனார் கோவில் தங்களது வகையராவுக்கு மட்டுமே சொந்தம் என்று செந்துறை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் இந்த கோவில் யாருக்கு சொந்தமானது அல்லது ஊர் பொது கோவிலா என்று முடிவு எடுக்கும் வகையில் ஆட்சேபனை உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி தெரிவிக்கும்படி கேட்டு இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீதிமன்றத்திற்கு திரண்டு வந்து ஊர் பொதுக்கோவில் தான் என்று ஆதரவு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு திடீரென திரளான கிராம மக்கள் திரண்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story