சின்னசேலம் வங்கியில் அபாயஒலி ஒலித்ததால் பரபரப்பு
சின்னசேலம் வங்கியில் அபாயஒலி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில், நேற்று காலை 6.45 மணிக்கு மேல், திடீரென வங்கியில் இருந்து அபாய ஒலி ஒலித்தது. இதுபற்றி அறிந்த சின்னசேலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் வங்கி மேலாளருக்கும் இதுபற்றி தகவல் தொிவித்து அவரையும் அங்கு வர செய்தனர்.
இதன் பின்னர் போலீசார் வங்கி ஊழியர்களுடன் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு யாரும் இல்லை. இதன் மூலம், எலி ஏதேனும், அந்த பகுதியில் ஓடியதில் அபாய ஒலி ஒலித்து இருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் இந்த சம்பவத்தால், வங்கியில் ஏதேனும் கொள்ளை நடந்துவிட்டதோ என்கிற பரபரப்பு அப்பகுதியில் சிறிது நேரம் நிலவியது.