விழுப்புரம் அருகே கரும்பு டிராக்டர் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு


விழுப்புரம் அருகே கரும்பு டிராக்டர் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கரும்பு டிராக்டர் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்றது.

விழுப்புரம்

விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்த ரெயில் நேற்று மாலை வழக்கம்போல் 5.30 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்டது.

இந்நிலையில் முகையூர் பகுதியில் இருந்து கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்று அங்குள்ள தண்டவாளத்தை மாலை 5.50 மணியளவில் கடக்க முயன்றபோது ஆக்சில் கட்டாகி தண்டவாளத்தின் குறுக்கே நடுவழியிலேயே நின்றது. இதனிடையே விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், முகையூர் அருகே வந்துகொண்டிருந்தது.

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தம்

இதையறிந்ததும் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர், இதுபற்றி விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள், வெங்கடேசபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அவர்கள், திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரெயில் வெங்கடேசபுரம் பகுதியில் நிறுத்தப்பட்டது.

பின்னர் தண்டவாளத்தின் குறுக்கே பழுதாகி நின்ற கரும்பு டிராக்டரை சரிசெய்யும் பணி நடந்தது. அப்பணி மாலை 6.30 மணிக்கு முடிவடைந்த பின்னர் கரும்பு டிராக்டர் அங்கிருந்து புறப்பட்டது. அதன் பிறகு வெங்கடேசபுரத்தில் இருந்து அந்த ரெயில் திருப்பதிக்கு புறப்பட்டது. ரெயிலின் இந்த தாமதம் காரணமாக பயணிகள் அவதியடைந்தனர்.


Next Story