கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x

அடிப்படை வசதி கேட்டு கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

அடிப்படை வசதிகள்

கறம்பக்குடி அருகே உள்ள கருகீழத்தெரு ஊராட்சியில் குரும்பிவயல், பணயவயல், வேம்பங்குடி வயல் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மறியலுக்கு முயற்சி

இதனால் அதிருப்தி அடைந்த 3 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக வேன்களில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story