நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை-அமைச்சர் மூர்த்தி பேட்டி
நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
நடிகர் சூரி ஓட்டலில் சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீட்டு முகாம், மதுரை யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கின்றனர். இந்த சட்டத்தின்படி, போலி பத்திரப் பதிவின் மூலம் தங்களது நிலங்களை பறிகொடுத்துள்ள நபர்கள் பத்திரப் பதிவுத்துறை அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து தங்களது நிலங்களை மீட்டுக்கொள்ளலாம்.
நடிகர் சூரி
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாக முறையாக வரி செலுத்தாத வணிகர்கள் தற்போது முறையாக அரசுக்கு வரி செலுத்தி வருகின்றனர். கடந்த 6 மாத காலத்தில் வணிகவரித் துறையின் மூலம் ரூ.66 ஆயிரம் கோடியும், பதிவுத் துறையின் மூலம் ரூ.8 ஆயிரத்து 300 கோடியும் மொத்தம் சுமார் ரூ.74 ஆயிரத்து 300 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.1.50 லட்சம் கோடி அரசுக்கு வருவாயாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள், அமைச்சர் மூர்த்தியிடம் நடிகர் சூரி ஓட்டலில் நடந்த வணிகவரி சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வதற்கான அதிகாரம் வணிகவரித்துறைக்கு உள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் தப்பிக்க முடியாது. யார் தவறு செய்திருந்தாலும், சட்ட விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி, கள்ளந்திரி ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சரவணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் காளிதாஸ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகலா, ஊராட்சி ஒன்றிக் குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.