தமிழகம் கேரளா இடையே பிரச்சினை ஏற்படும்


தமிழகம்  கேரளா இடையே பிரச்சினை ஏற்படும்
x

பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் தமிழகம்-கேரளா இடையே பிரச்சினை ஏற்படும் என்று ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் கூறினார்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் தமிழகம்-கேரளா இடையே பிரச்சினை ஏற்படும் என்று ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.

ஆழியாறு அணை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை கடந்த 1962-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் 3864 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம்.

இந்த அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் கோவை குறிச்சி- குனிய முத்தூர் என பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதை தவிர கேரளாவுக்கு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7½ டி.எம்.சி. நீர் வழங்கப்படுகிறது. தற்போது ஆழியாறு அணைக்கு எதிர்பார்த்த அளவு நீர் கிடைப்பதில்லை.

ஆனாலும் அந்த நீரை கொண்டு விவசாயம், குடிநீர் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆழியாறு அணை பாசன பகுதிகள் தரிசு நிலங்களாக மாறி விடும் என்ற கவலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து ஓய்வு பெற்ற பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:-

இருமாநில பிரச்சினை

பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து பொள்ளாச்சி, உடுமலை, காங்கயம் பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்கவில்லை.

எனவே ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது தமிழகம்- கேரள மாநிலம் பிரச்சினையை உருவாக்கும். இதனால் இருமாநில உறவு பாதிக்கும்.

மொத்த நீர்வளத்தில் 30.50 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கும், 19.55 டி.எம்.சி. நீர் கேரளாவிற்கும் பகிர்ந்து கொள்வது பி.ஏ.பி. திட்டமாகும்.

கேரளாவிற்கு வறட்சி காலங்களில் 16 முதல் 17 டி.எம்.சி. நீர் தான் கிடைக்கிறது. இதற்கே ஒப்பந்த மீறல் என நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.

விதிமீறல்

இதற்கிடையில் பி.ஏ.பி. திட்டத்தில் 1994-க்கு பிறகு 3 மண்டலங்க ளாக இருந்த பாசன வசதி அமைப்புகள் 4 மண்டலங்களாக மாற்றப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 4 முதல் 5 சுற்றுகள் தண்ணீர் கிடைப்பதே சிரமமாகி விட்டது.

இதை தவிர ஆழியாறு, பாலாறு, பாரதபுழா வடிநிலங்களில் உள்ள நகரங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு 2 டி.எம்.சி. குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவு, சுந்தராபுரம் பகுதிகளுக்கு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதை கேரளா எதிர்த்ததால் அந்த பகுதிகள் பாரதபுழா வடிநிலத்தில் வருகிறது என்று விளக்கி வருகிறோம். வெள்ள கோவில், காங்கயம் பகுதிகள் உள்ள அமராவதி ஆற்றுப்படுகை, காவேரி படுகையின் துணை படுகையாக இருப்பதால் அந்த பகுதிகளுக்கு நீர் வழங்கிய திட்டத்தை இன்று வரை விதிமுறை மீறல் என்று கேரளா கூறி வருகிறது.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் வழங்கினால் பல பிரச்சினைகள் ஏற்படும். இதை புரிந்து கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story