''அண்ணாமலை நடைபயணத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது''-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி


அண்ணாமலை நடைபயணத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது-சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
x

அண்ணாமலை நடை பயணத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை

சிறைகளில் நூலகங்கள்

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மாணவர்கள், இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. சிறைகளில் நூலகங்கள் சிறிய அளவில் இருந்தன. அதனை பெரிய நூலகங்களாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 1 லட்சம் புத்தகங்கள் வரை வைக்கப்பட்டுள்ளது.

கைதிகள் ஓய்வு நேரங்களில் புத்தகத்தை படிப்பதின் மூலம் மனம் திருந்தி நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள கூடிய வகையில் உள்ளது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகள், கல்லூரி படிப்பு, தொழில் படிப்புக்கான தேர்வுகளை எழுதுகிறார்கள். அவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுக்கிறோம். மேலும், 1 முதல் 10-ம் வகுப்பு வரைக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது.

விளையாட்டு போட்டிகள்

கல்வி கற்காதவர்கள் சிறையில் இருந்து வெளியே வரும் போது எழுத படிக்க தெரிந்தவர்களாக உருவாக்கி அனுப்புகிற பொறுப்பையும் சிறைத்துறை நடத்திக்கொண்டிருக்கிறது. சிறை கைதிகள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வீடுகளில் இருப்பதை போல் குடும்பத்தினர், உறவினர்களிடம் அலைபேசியில் பேச வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டுள்ளது. வீடியோ காலில் பேசும் வசதிக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறையில் பல்வேறு தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தண்டனை கைதிகள் குறைந்தபட்சம் மாதம் ரூ.6 ஆயிரம் ஈட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வகையில் சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறைகளில் மாலை நேரத்தில் பொழுதுபோக்கு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வருகிற ஆண்டுகளில் 9 மத்திய சிறைகளுக்கிடையே விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு மாற்றமும் ஏற்படாது

இதனை தொடர்ந்து நகராட்சி பகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், ''கவர்னரிடம் அண்ணாமலை எத்தனை பட்டியல் கொடுத்தாலும் அதனை சந்திப்போம். அண்ணாமலை அரசியல் செய்வதற்காக நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. அண்ணாமலை நடைபயணத்தால் ஒரு மாற்றமும் ஏற்படாது. அவருக்கு வேண்டுமானால் கால் வலிக்கும். ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட போது எழுச்சி இருந்தது. இவர்களது நடைபயணத்தில் எழுச்சி உள்ளதா? என்று பார்ப்போம்'' என்றார்.


Next Story