வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை


வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை
x

அரவக்குறிச்சி, கரூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

தங்க நகைகள் கொள்ளை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சிய்தப்பட்டி காலனி நேரு நகரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 53). இவர் தனது வீட்டின் அருகிலேயே நெசவுபட்டறை வைத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டி விட்டு நெசவுபட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். மதியம் வீட்டிற்கு பழனிவேல் வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோக்களில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்கசங்கிலி, 4 பவுன் வளையல் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். .

எண்ணெய் வியாபாரி வீடு

கரூர் சோழன் நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (49). எண்ணெய் வியாபாரி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் குமாரசாமி உள்ளே சென்று பார்த்தபோது, அவர் அலமாரியில் வைத்திருந்த 2 பவுன் தங்கமோதிரம், ரூ.20 ஆயிரம் ரொக்கம், சில்வர் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து குமாரசாமி கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story