செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள்
செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் அண்ணாமலை குற்றச்சாட்டு.
கரூர்,
மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட பா.ஜ.க. சார்பில் கரூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர், தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் இருந்து கடந்த மே, ஜூன் ஆகிய இரு மாதங்களில் மட்டும் ரூ.4,600 கோடிக்கு மின்சாரத்தை தமிழக அரசு வாங்கியுள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என காரணம் கூறி செயற்கை மின்தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம் மறைத்துவிட்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி மக்களிடம் மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.
ஒரு குடும்பம் வாழ்வதற்காக 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 54 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பற்றாக்குறையை போக்க மத்திய அரசு 10 சதவீதம் நிலக்கரியை வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால் வெளியே இருந்து 100 சதவீதம் வாங்க வேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. மே, ஜூன் மாதம் ரூ.422 கோடிக்கு நிலக்கரி வாங்கி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பா.ஜ.க. வினரை மிரட்டினால் அனைவரும் உள்ளே போவீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.