ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ளனர் -அண்ணாமலை குற்றச்சாட்டு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்துள்ள னர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கோவை,
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி அராஜக தேர்தல் வேண்டுமா? என மக்களிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளனர். இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் வளர்ச்சி பின்னால் செல்கிறது.
ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கிறார்கள். இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர்.
தலைகுனிவு
இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பார்த்து ஓடுகிறார்கள். ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய், இடைத்தேர்தல் என்றால் 100 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு அதுவே ரூ.250 கோடி வரை செலவாகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்பதில்லை. எனவே அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள்.
மக்கள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள். லஞ்சம் வாங்குவது போல்தான் ஓட்டுக்கு பணம் வாங்குவதும். 2024 -ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா?.
தோல்வி பயத்தில் அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். தேர்தல் தோல்வி பயத்தில்தான் அறிவித்து உள்ளார். முதல்-அமைச்சர் சொன்ன விதம், இடம், நேரம் தவறு. மற்றபடி இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். தனது மகன் செங்கல்லை எடுத்து வந்ததால்தான் 2021-ல் ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதல்-அமைச்சர் அவரையே அவமானம் படுத்திக்கொள்கிறார்.
2026-ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை வரும். அதற்கு முன்பு வேண்டும் என்றால் தமிழக அரசே இதற்கான நிதியை ஒதுக்கலாம். இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள். உதயநிதி ஸ்டாலின் சினிமாவைப் போல் அரசியலில் நடிக்கிறார்.
2024 நாடாளுமன்றதேர்தலில் பிரதமருக்காக மக்கள் வாக்களித்து தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.