20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது;முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது;முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. கடந்த 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.

ஈரோடு

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. கடந்த 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.

அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அறிமுக பொதுக்கூட்டம் ஈரோடு பெருந்துறை ரோடு வேப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு நடந்தது.

கூட்டத்துக்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

வெற்றிக்கு முதல்படியாகும்

கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை இந்திய நாடே பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று தங்கள் கவனத்தை இங்கே வைத்திருக்கிறார்கள். இங்கு அ.தி.மு.க. பெறும் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றிக்கு முதல் படியாகும்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஏற்காடு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது ஏற்காடு தேர்தலில் நாம் வென்றாக வேண்டும். நாம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம். தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

தேனீக்கள் போல..

நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாக அமர்ந்தோம். இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இந்த வெற்றியை பெற இரவு பகல் பாராமல், தேனீக்கள் போல உழைக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கான ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் விழ வேண்டும். 27-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்து, வாக்குகள் எண்ணுகிற போது தொடக்கத்தில் இருந்தே இரட்டை இலை சின்னம்தான் முன்னணியில் இருக்கிறது என்ற செய்தி மட்டுமே வரவேண்டும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் முடிந்து விட்டன. இந்த காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்காக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டு இருக்கிறாரா? ஆனால், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் விற்பனை இதுதான் அதிகரித்து இருக்கிறது.

ஏராளமான திட்டங்கள்

மக்களுக்கான ஏதாவது ஒரு திட்டத்தை கொடுத்து இருக்கிறார்களா?. ஈரோடு மாவட்டத்துக்கு அ.தி.மு.க.தான் ஏராளமான திட்டங்களை அளித்து இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தனியாக பிரித்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பின் ஜெயலலிதா ஏராளமான திட்டங்கள் கொடுத்தார். அவர்களின் ஆசியில் நடந்த எனது ஆட்சியிலும் ஏராளமான திட்டங்களை வாரி வாரி வழங்கினோம். அ.தி.மு.க.தான் மக்களுக்கு நன்மைகள் தரும் கட்சி. தமிழகம் ஏற்றம் காண வேண்டும். பொருளாதார முன்னேற்றம் வரவேண்டும். ஈரோடு விவசாயமும், ஜவுளித்தொழிலையும் அதிகமாக கொண்ட மாவட்டம். எனவேதான் எங்கள் ஆட்சியில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தோம். சரியான நீர் மேலாண்மைசெய்தோம். ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை கொண்டு வந்தோம். ஏரிகள் தூர்வாரப்பட்டன. தடுப்பணைகள் கட்டப்பட்டன. மழைநீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டது.

ஜவுளித்தொழில்

ஈரோடு கிழக்கு தொகுதி ஜவுளித்தொழிலை முக்கிய தொழிலாக கொண்டது. எனவே விசைத்தறி, கைத்தறி தொழில்களுக்கு அ.தி.மு.க. அரசு துணையாக நின்றது. தைப்பொங்கலின்போது ஏழைகளுக்கு வழங்கும் வேட்டி-சேலை உற்பத்தியை ஈரோடு விசைத்தறியாளர்களிடம் அ.தி.மு.க. அரசு வழங்கியது. இதனால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. பொருளாதார வசதி ஏற்பட்டது. ஆனால் விடியா தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றதும் விலையில்லா வேட்டி சேலையை உற்பத்தியை ஈரோடு விசைத்தறியாளர்களுக்கு வழங்கவில்லை. ஆர்டர்களை ரத்து செய்தது. இதனால் தொழில் நசிவடைந்து ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலை இழந்து வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். இவர்களுக்கு விடியா அரசு என்ன தீர்வு தரப்போகிறது. உங்களைத்தேடி தி.மு.க.வினரும், அமைச்சர்களும் வரும்போது பதில் கேளுங்கள்.

ஆசைப்பட்டார்கள்

இங்கே வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு ஏராளமான வாக்காளர்கள், பொதுமக்கள் வருவதற்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களை ஆசைகாட்டி மண்டபங்களிலும், குடோன்களிலும் அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை நீங்கள் அடைத்து வைத்தாலும் தேர்தலில் அவர்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஆட்சி மாறும், காட்சிகளும் மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையாளர்களாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும்.

வாக்காளர்களை நீங்கள் எப்படி தடுத்தாலும் அ.தி.மு.க.வின் வெற்றியை தடுக்க முடியாது. காற்றை யாரும் தடுக்க முடியாது. அதுபோல் அ.தி.மு.க. வெற்றியை தடுக்க முடியாது.

நமதுவெற்றி

இங்கே 20 அமைச்சர்கள் வந்து ஓட்டு சேகரிக்கிறார்கள். போட்டியிடுவது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி. அவர்களுக்காக தி.மு.க. அமைச்சர்கள் ஓட்டு கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பயம் வந்து விட்டது. இந்த பயம்தான் நமது வெற்றி.

அமைச்சர்கள் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணத்தை தருகிறார்கள். வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டு அ.தி.மு.க.வுக்கு போடுங்கள்.அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டன. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வின் திட்டங்களை மட்டுமே இப்போது நிறைவேற்றுகிறார்கள். அ.தி.மு.க.வின் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் ரிப்பன் வெட்டுகிறார். அ.தி.மு.க.வின் குந்தைகளுக்கு முதல்-அமைச்சர் பெயர் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள். அவர் பெயரில் மதுரையில் பெரிய நூலகம் கட்டுகிறார்கள். எழுதாத பேனாவுக்கு சிலை வைக்கிறார்கள். மறைந்த தலைவர் பற்றி பேசக்கூடாது.

பேனா வைக்கட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை கடலில்தான் வைக்க வேண்டுமா?. அவரது நினைவு இல்லத்தில் ரூ.2 கோடி அளவில் வைக்கட்டுமே. மீதி தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடலாமே. மக்களின் பணத்தை எடுத்து குடும்பத்துக்காக செலவிடலாமா?, இது நியாயமா...? உங்கள் வரிப்பணம் வீணாக போகவேண்டுமா?.

மேம்பாலம்

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். இந்த ஈரோடு மாநகராட்சிக்கு மட்டும் ரூ.484 கோடியில் குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். நமது ஆட்சியில் சோதனை ஓட்டம் வரை முடித்துவிட்டோம். ஆனால், 21 மாதங்கள் ஆகியும் தி.மு.க. அரசால் மக்களுக்கு தண்ணீரை கொண்டு சேர்க்க முடியவில்லை. இதைத்தான் திறமையற்ற அரசு என்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் காலிங்கராயன் மணிமண்டபம், கிருபானந்தவாரியார் பிறந்தநாள் அரசு விழா என்று பல அமைக்கப்பட்டன. ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி ரூ.81 கோடியில் கட்டி இருக்கிறோம். ரூ.54 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

அப்போது ரூ.350 கோடியில் காலிங்கராயன் மாளிகையில் இருந்து திண்டல் வரை மேம்பாலம் கட்ட போடப்பட்ட திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. ஈரோடு-சத்தி ரோடு ரிங்ரோடு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எங்கள் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதை பட்டியலிடுகிறோம்.

சொல்ல முடியுமா?

தி.மு.க.வின் 21 மாத ஆட்சியில் ஏதேனும் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்று தில் இருந்தால் உங்களால் சொல்ல முடியுமா?. மகனின் சினிமா பற்றி அமைச்சருடன் விவாதிக்கும் முதல்-அமைச்சரால் மக்களுக்கு நன்மை தர முடியுமா?.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ்.தென்னரசுக்கு வெற்றி அளிப்பதன் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி அவர்களே ரிலீஸ் செய்கிறார்கள். இவர்களின் தலையீட்டால் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 150 படங்கள் திரையிட முடியாமல் முடங்கிக்கிடக்கிறது.

சொத்துவரி

மின்கட்டணம் உயர்ந்து விட்டது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். இப்போது மின்சாரம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் சொத்து வரியை உயர்த்தி விட்டார். குடிநீர் கட்டணம் உயர்ந்து விட்டது. ஒரு குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மாத செலவு ஆகி வந்த நிலையில், இப்போது ரூ.7 ஆயிரத்து 500 செலவாகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டது என்று நமது ஆட்சியை விமர்சனம் செய்தார். ஆனால் இந்த 2 ஆண்டு ஆட்சியில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். கடன் வாங்கினார்களே, மக்களுக்காக ஏதேனும் செய்து இருக்கிறார்களா?. விவசாயிகளுக்கு கொடுத்தார்களா?. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுத்தாரா?. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வேன் என்றார் செய்தாரா, எல்லாம் ஏமாற்று வாக்குறுதிகள். தேர்தலின் போது 520 அறிவிப்புகள் வெளியிட்டார். அதில் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். அனைத்தும் பச்சை பொய். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1000 கொடுத்தாரா?. 21 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கிடைத்ததா?, கியாசுக்கு மாதம் ரூ.100 மானியம் தருவதாக கூறினார். கிடைத்ததா?. முதியோர் உதவித்தொகை வழங்க 110 விதியின் கீழ் 5 லட்சம் பேருக்கு உத்தரவு பிறப்பித்து வழங்கினேன். இப்போது 7 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருக்கிறார்கள். இதுதான் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு. ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க.

பொய் வாக்குறுதி

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை என் சிந்தனையால் கொண்டு வந்தேன். இந்த ஆண்டு 564 மாணவ-மாணவிகள் மருத்துவம் படிக்கிறார்கள்.

தி.மு.க. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். மக்களை ஏமாற்றிய அவர்களுக்கு பாடம் புகட்ட தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற முடியாது என்று உணர்த்துங்கள்.

இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜனதா தேசிய செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, விவசாய சங்கத்தை சேர்ந்த பெரியசாமி, மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சி.சரஸ்வதி, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.பொன்னையன், கே.சி.கருப்பணன் மற்றும் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, ரா.மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை, ஈரோடு மாவட்ட இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன், இணை செயலாளர்கள் திங்களூர் கந்தசாமி, வைஸ் ஆர்.பழனிச்சாமி, வக்கீல் அணி பொறுப்பாளர் துரைசக்திவேல், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன், மாவட்ட தலைவர் விஜயகுமார், பா.ஜனதா கட்சி விவசாய அணி மாநில துணைத்தலைவர் தங்கராஜ், விளையாட்டு பிரிவு மாநில நிர்வாகி அக்னி எம்.ராஜேஸ், ெஜயலலிதா பேரவை பகுதி இணைசெயலாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஈரோடு மாநகர் மாவட்டசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story