குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர்
மதுரையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மாநகராட்சி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
மதுரை மாநகராட்சி 88-வது வார்டு தெய்வக்கனி தெரு, கிறிஸ்தவர் தெரு, 89-வது வார்டு சூசைமைக்கேல் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்களுடன் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாக கூறினர். அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ தெருவுக்கு ஆய்வுக்கு வந்த மண்டல தலைவர் முகேஷ் சர்மாவை முற்றுகையிட்ட அப்பகுதி பொதுமக்கள் கழிவு நீர் கலந்து வரும் குடிநீரை பாட்டிலில் பிடித்து காண்பித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்து 20 நாட்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். தொடர்ந்து 89-வது வார்டு சூசைமைக்கேல் தெரு மற்றும் பிரச்சினைக்குறிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
துர்நாற்றம் வீசுகிறது
இதுகுறித்து அப்பகுதியினை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை தண்ணீர் நன்றாக வந்தது. அதற்கு பின் சாக்கடை வாடையுடன் தான் தண்ணீர் வருகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் விலைக்குத்தான் வாங்குகிறோம். இப்பகுதிக்கு மண்டல தலைவர் வந்து தற்போது பார்த்துவிட்டு சரி செய்வதாக கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாசேதுங் கூறுகையில், இப்பகுதியில் குடிநீர் இணைப்பு குழாய்கள் போடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதற்குப்பின் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. இந்த பாதாள சாக்கடை இணைப்பு குடிநீர் குழாய்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் கழிவு நீர் கலந்து வருகிறது. அதேபோல் மழை பெய்தால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பி விடும். அவை குடிநீர் குழாய் செல்லும் பாதை வழியாகத்தான் பாதாள சாக்கடைகளுக்கு செல்லும். குடிநீர் வரும் நேரங்களில் எல்லாம் அந்த கழிவுநீர் செல்லும் குழாய் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி பெரும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இப்பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளை புதிதாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.