வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை; ரூ.5லட்சம் திருட்டு
வெள்ளகோவில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன்நகை மற்றும் ரூ.5 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நூற்பாலைகள்
திருப்பூர் மாவட்டம் காங்யத்தை அடுத்த ஓலப்பாளையம் அருகே கொழிஞ்சிக்காட்டு வலசு உள்ளது. இங்கு கோவையைச் சேர்ந்த சகோதரர்கள் விஸ்வநாதன், துரைசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் வேஸ்ட் பனியன் துணியில் இருந்து மீண்டும் நூல் தயாரிக்கும் ஜெயக்குமரன் ஸ்பின்னிங் மில் என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வருகின்றனர். இந்த மில்லின் உள்பகுதியில் அவர்களுக்கு சொந்தமான வீடும் உள்ளது. இங்குதான் அவர்கள் தங்குவார்கள்.
இந்த நிலையில் விஸ்வநாதன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் கோவை சென்றுவிட்டனர். இதனால் துரைசாமியும், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் மட்டும் அங்கு வீட்டில் இருந்தனர். பின்னர் நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டி விட்டு ஸ்பின்னிங் மில்லில் உள்ள அலுவலகத்திலேயே தங்கிவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 பவுன்நகை மற்றும் ரூ.5 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிசென்று இருப்பது தெரியவந்தது.
போலீசில் புகார்
இது குறித்து வெள்ளகோவில் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர். தம்பதி இருவரும் அலுவலகத்தில் தங்கியதை தெரிந்து கொண்ட ஆசாமிகள், மில்லின் காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து, பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளனர். இதையடுத்து கைரேகை நிபுணர்கள்அங்கு வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.