பராமரிப்பின்றி கிடக்கும் தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம்
50 ஆண்டுகள் பழமையான் தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொறையாறு:
50 ஆண்டுகள் பழமையான் தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வள்ளியம்மை
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியை சேர்ந்த முனுசாமி, மங்களம் தம்பதியினர் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு வேலை தேடி சென்றனர். அப்போது அங்கு அவர்களுக்கு பிறந்த மகள் தான் வள்ளியம்மை.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியுடன், இளம் வயதில் வள்ளியம்மை போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றார்.
சிறையில் சித்ரவதை
இவருக்கு சிறையில் சித்ரவதை செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அரசு 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவரை விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மையை, காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது தாய்நாட்டு மக்களுக்காக தனது உயிரை இழந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை என காந்தியிடம், வள்ளியம்மை கூறியுள்ளார். 1914-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி தனது 16 வயதில் வள்ளியம்மை உயிரிழந்தார்.
நினைவு மண்டபம்
தமிழ்நாட்டிற்கு வந்த காந்தி, வள்ளியம்மையின் பூர்வீக கிராமமான தில்லையாடிக்கு கடந்த 1915-ம் ஆண்டு மே 1-ந் தேதி சென்று கிராம மக்களை சந்தித்து உரையாடினார். அவர் அமர்ந்து பேசிய இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
காந்தி நூற்றாண்டு விழா நடந்த போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தில்லையாடியில் தியாகி வள்ளியம்மைக்கு நினைவு மண்டபம் அமைத்தார். அதில் பல அறிய புகைப்படமும், காந்தி தனது நண்பர் தில்லையாடியை சேர்ந்த சுப்பிரமணிய பத்தர் என்பவருக்கு தமிழில் எழுதிய கடித நகலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பின்றி காணப்படுகிறது
தில்லையாடியில் வள்ளியம்மையின் நினைவு மண்டபத்தை காணவும், அவரின் வரலாறை தெரிந்து கொள்ளவும் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
50 ஆண்டுகள் பழமையான தில்லையாடி தியாகி வள்ளியம்மை மணிமண்டபம் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையின் பராமரிப்பில் உள்ளது. தற்போது இந்த நினைவு மண்டபம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் கசிந்து அரிய ஓவியங்கள், புகைப்படங்கள் வீணாகி விட்டன.
நவீனவசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும்
தில்லையாடி ஊராட்சி நிர்வாகத்தினர் மின் விளக்குகளை பராமரிப்பு செய்து வருகின்றனர். ஆனால் மின்சார வயர்கள் பழையதாக இருப்பதால் மின் விளக்குகள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இந்த வளாகத்தில் நூலகம் உள்ளதால் அதிகமான வாசகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
எனவே சேதமடைந்த நினைவு மண்டபம் கட்டிடத்தால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு தியாகி தில்லையாடி வள்ளியம்மை மணி மண்டபத்தை நவீன வசதிகளுடன் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.