திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே இடங்கண்ணியில் உள்ள திரவுபதி அம்மன், மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரவுபதி அம்மன், மகா மாரியம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று திரவுபதி அம்மன், மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். அக்னி கரகம் வீதியுலா முடிந்து கோவில் வளாகத்தை நெருங்கியதும் அக்னி குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து அக்னி கரகம் ஏந்தியவர் தீ மிதித்து தொடங்கி வைத்த பின்னர், பூங்கரகம் உள்ளிட்ட கரகங்கள் ஏந்தியவர்கள் தீ மிதித்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து வழிபட்டனர். தீமிதி திருவிழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.