தங்கம் என நினைத்து கவரிங் நகையைதிருடியவர் கைது
தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடியவர் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை பைசல் நகரை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 48). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கவிதா(43). திருவாடனை நெடுஞ்சாலைதுறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் கவிதாவின் தாயாரும், மகன் கவின்விநாயக் (9) ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஒருவர் வீட்டின் கதவை தட்டவே கவின்விநாயக் சென்று திறந்து பார்த்தபோது அங்கு நின்றிருந்த முதியவர் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனால் சிறுவன் தண்ணீர் எடுக்க சமையல் கட்டிற்கு சென்ற போது அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் பர்சில் வைத்திருந்த இருந்த ஒரு கவரிங் செயின், கவரிங் வளையல், ரொக்கம் ரூ.500 ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். தண்ணீர் எடுத்து கொண்டு வந்து பார்த்த கவின் விநாயக் தண்ணீர் கேட்டவரை காணததை கண்டு திரும்பி வந்துவிட்டார். அப்போது கட்டிலில் வைத்திருந்த கவரிங் நகை, பணம் ஆகியவை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுரை சேர்ந்த சீனி நூர்தீன் (63) என்பவரை கைது செய்தனர். தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை திருடி முதியவர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.