திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை

திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. பின்னர் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4.30 மணி அளவில் தூறலுடன் மழை பெய்தது. அதன்பிறகு மழை கொட்ட தொடங்கியது. திருப்பூர்-தாராபுரம் ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு, கரட்டாங்காடு, கோவில்வழி, அமராவதிபாளையம் சுற்றுப்புற பகுதிகளில் ¾ மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதுபோல் பல்லடம் ரோடு, அருள்புரம் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்தது.
நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மழைநீருடன்கழிவுநீரும் கலந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால் மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மாநகர பகுதியில் இந்த மழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு சென்றதை காண முடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.