வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடிய போது டிராக்டர் மோதி 3½ வயது குழந்தை சாவு - தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு
வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த 3½ வயது ஆண் குழந்தை டிராக்டர் மோதி பலியானது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட கொசவன்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கயல்விழி. இவர்களது குழந்தை பவன் (வயது 3½). குழந்தை பவன் நேற்று மாலை வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செங்கற்களை ஏற்றிக்கொண்டு பெருமாள் கோவில் தெரு வழியாக டிராக்டர் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த பவன் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்த நிலையில் டிராக்டர் மோதி குழந்தை பவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.