திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
விடுமுறை நாட்களில் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி
விடுமுறை நாட்களில் திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
திருச்செந்தூர் ரெயில்
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து, 6.40 மணிக்கு புறப்படுகிறது.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயில் பொள்ளாச்சிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து, 8.35 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அலைமோதிய கூட்டம்
இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் ரெயிலில் வழக்கத்தை விட அதிகமாக பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் ரெயிலில் ஏறி இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்.
இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் ரெயிலில் நின்று கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல் இருந்தது. எனவே திருச்செந்தூர் ரெயிலில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் கூறினார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கட்டணம் குறைவு
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு பொள்ளாச்சி வழியாக ரெயில் இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலியாக வரும் ரெயிலில் பொள்ளாச்சியில் இருந்து தான் அதிகளவு பயணிகள் ஏறுகின்றனர். பஸ்களை விட இந்த ரெயிலில் கட்டணம் மிகவும் குறைவு.
எனவே திருச்செந்தூர் ரெயிலில் தினமும் சராசரியாக 300 பேர் வரை பொள்ளாச்சியில் ஏறி செல்கின்றனர். ஆனால் விடுமுறை நாட்களில் 500 முதல் 700 பயணிகள் வரை பயணிக்கிறார்கள்.
கோடை விடுமுறை
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் திருச் செந்தூர் கோவில் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள ஊர்க ளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்களில் பலர் திருச்செந்தூர் ரெயிலையே பயன்படுத்துகின் றனர். அவர்கள் மீண்டும் பொள்ளாச்சிக்கு வர மறுமார்க்கத்தில் புறப்படும் அதே ரெயிலில் வருகின்றனர்.
இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பாலக் காடு - திருச்செந்தூர் ரெயிலில் (வண்டி எண் 16731) வருகிற 9-ந் தேதியில் இருந்து 13-ந் தேதி வரையும், வண்டி எண் 16732-ல் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. கூடுதலாக ஒரு பெட்டியை இணைப்பது போதுமானது அல்ல.
3 பெட்டிகள் இணைக்க வேண்டும்
விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மதுரைக்கு பிறகும் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
திருச்செந்தூர் விசாக திருவிழாவிற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் அதிக ளவு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே திருச்செந்தூர் ரெயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் வரை இணைக்க வேண்டும். அப்போது தான் பயணிகள் நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும்.
கூடுதல் வருவாய்
மேலும் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரெயிலை இயக்குவதால் எந்த பயனும் இல்லை. எனவே மேட்டுப்பாளை யத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூ ருக்கு இயக்கினால் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பல்வேறு நகரங் களுக்கு ரெயில் இயக்குவதற்கு பாலக்காடு ரெயில்வே கோட்டம் தடையாக உள்ளது. எனவே கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும்.
அதோடு தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை வெற்றிவேல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.