திருச்செங்கோட்டில்10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை, திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு கூட்டம், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விழா நடந்தது.
விழாவில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், கடன்சுமை, உடல்நலம் குறைபாடுகள் நீங்க மல்லிகை|, முல்லை, தும்பை, அரளி, தாமரை, எருக்கன் உள்ளிட்டவை கொண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.
நேற்று காலை கணபதி வழிபாடு, மூலமந்திர ஹோமம், மூலவர் திருமேனிகள், ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் மற்றும் தொகை அடியார்கள், உற்சவர் திருமேணிகளுக்கு திருமஞ்சன அபிஷேகம், அலங்காரம், திருமுறை பாராயணம், பேரொளி வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க திருச்செங்கோட்டில் உள்ள 4 ரத வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.