முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்


முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ந் தேதி கந்தசஷ்டி விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண கோலத்தில் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(செவ்வாய்கிழமை) மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

இதேபோன்று கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர் வேலாயுதசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து வேலாயுத சாமி வள்ளி-தெய்வானையுடன் திருவீதி உலா வந்தார். இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் மகா அபிஷேகம், தீபாராதனையுடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.

திருக்கல்யாணம்

மேலும் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு யாக சாலை பூஜைகள், 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், யாக கலச அபிஷேகம், காப்பு அவிழ்த்தல் நடந்தது. பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு திருமாங்கல்ய தாரனம், மொய்ப்பணம், பாதகாணிக்கை செலுத்துதல், மகா தீபாரதணை, அன்னதானம் நடந்தது.

இதற்கிடையில் நெகமத்தில் உள்ள தங்கவேல் அய்யன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் 4 கால பூஜை, அபிஷேக ஆராதனையும், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. அதன்பின்னர் நேற்று காலை 9 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை)ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

அன்னதானம்

இதேபோன்று வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று முருகப்பெருமானுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் வால்பாறை பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story