முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அரியலூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விழா நடந்தது. கடைசி நாளான நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும் அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நேற்று கல்யாணசுப்பிரமணியர் தேவசேனா திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன், வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் திருக்கல்யாணத்துக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் வேள்வி தொடங்கப்பட்டு திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்தை அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் செய்தார். இதில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தேவசேனைக்கு மாங்கல்ய தாரணம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள் பல்வேறு பக்தி பதிகங்களை பாடினார். இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி அளவில் கல்யாணசுப்பிரமணியர் தேவசேனைக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.
உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று இரவு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.