கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

அழகர்கோவில்

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளழகர் கோவில்

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பவுர்ணமி நிறை நாளில் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் தனி சிறப்புடையதாகும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி அன்று தொடங்கியது. அன்று மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.

தொடந்து 3, 4-ந்தேதிகளில் மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணக்குடை பரிவாரங்களுடன் கள்ளழகர் என்ற சுந்தர ராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன், மனோரஞ்சித மாலைகள் அலங்காரத்தில், சுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் புறப்பாடாகி அங்குள்ள நந்தவன ஆடி வீதிகள் வழியாக சென்று திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பின்னர் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் தீபாராதனைகளும் நடந்தது.

திருக்கல்யாணம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதற்காக திருக்கல்யாண மண்டபம் முழுவதும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஊஞ்சல் சேவையில் கள்ளழகர் என்ற சுந்தரராசப் பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களும் எழுந்தருளினர்.

அப்போது கோ பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 10.10 மணிக்கு மேளதாளம் முழங்க பட்டர்களின் வேத மந்திரங்களுடன் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் 4 பிராட்டிமார்களையும் மாலைகள் அணிவித்து பெரியாழ்வார் முன்னிலையில் மணந்தார். தொடர்ந்து நூபுரகங்கை தீர்த்தத்தினால் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் திருக்கல்யாண காட்சியை தரிசனம் செய்தனர்.

மொய் எழுதிய பக்தர்கள்

திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து 3 இடங்களில் கோவில் வளாகத்திலேயே பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர். பின்னர் அவர்களுக்கு பிரசாத பைகள் மஞ்சள் கயிருடன் வழங்கப்பட்டது. இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து இருப்பிடம் சென்றார். இன்று(வியாழக்கிழமை) மஞ்சள் நீர்சாற்று முறையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா, அருள் செல்வன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராம், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story